Monday 25 November 2013

இரண்டாம் உலகம் - ஓர் புதிய பயணம்...

இனி தமிழ் படங்களின் மீது என்னுடைய பார்வையை வெளியிடக் கூடாது  என்று தான் நினைத்திருந்தேன். அனால் சமீபத்தில் வெளியான 'இரண்டாம் உலகம்' படத்தினைப் பார்த்த பின்னர், அதனைப் பற்றி வெளியான சில விமர்சனங்களால்  அதனைப் பற்றி என்னுடைய பார்வையை வெளியிட முடிவு செய்து இந்த பதிவை உங்களுக்கு வழங்குகிறேன். இந்த தமிழனின் அற்புதமான படைப்பிற்கு, இந்த பார்வையை தமிழிலேயே வழங்குகிறேன்.



படத்தின் கதைக்களம் காதலும், அதைச் சார்ந்த இடமும். இவ்வுலகைத் தாண்டி நிற்கும் காதலை எவரும் எதிர்பாரா வண்ணம் அமைத்து, ஒரு புதிய உலகை நம்மிடம் அறிமுகப்படுத்துவதே இந்த 'இரண்டாம் உலகம்'. கதையின் நாயகனாக ஆர்யா. மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதலின் பிரிவைத் தாங்கி நிற்கும் இடத்திலும் சரி, அனுஷ்காவோடு ஏற்படும் சில ஊடல் காட்சிகளிலும் சரி, மனிதர் தன்னுடைய முழு நடிப்பினையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.

கதையின் நாயகி அனுஷ்கா. இவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்த இந்த படம் மிகையாய் உதவியிருக்கிறது. காதல் காட்சிகள் மட்டுமில்லாமல், சண்டைக் காட்சிகளிலும்  தன் முத்திரையைப் பதித்திருக்கிறார். 'அருந்ததி' படத்திற்குப் பிறகு, அழகும் கம்பீரமும் கலந்த ஒரு அற்புதமான ஒரு கதாபாத்திரம். மற்ற கதாபாத்திரங்களும் தங்களுக்கு கிடைத்த சிறு வேடங்களைச் செவ்வனே செய்கின்றனர். அவற்றுள், ஆர்யாவின் அப்பாவாக வருபவர் [பெயர் தெரியவில்லை] மிகவும் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம், ராம்ஜியின் காமெராவும், ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் தான். படத்தின் கதையோட்டத்திற்கு மிகவும் உதவுகிறது. படத்திற்கு அதில் நிலவும் கிராபிக்ஸ் காட்சிகள் மற்றொரு பலம். வேற்றுகிரக வடிவமைப்பு, வேற்றுகிரக சிங்கத்தோடு ஆர்யா போரிடும் காட்சிகள், கிராபிக்ஸின் உச்சம். பார்பவர்களுக்கு வர்ணஜால விருந்தாக அமைகிறது. அனிருத்தின் பின்னணி இசை சில இடங்களில் கதையோடு ஒன்றினையவில்லை. அது தான் படத்தின் மிகப்பெரிய பலவீனம்.

படத்தின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை இயக்குனர் செல்வராகவன் கையாண்டுள்ளார். உலகம் தாண்டி நிற்கும் ஒரு காதல் கதையை அட்டகாசமாக வடிவமைத்திருக்கிறார். படத்தின் திரைக்கதை சற்று மெதுவாகத் தான் செல்கிறது. ஆனால் கதையோட்டத்திலிருந்து சற்றும் விலகாமல் அப்படியொரு அட்டகாசமான கதை, திரைக்கதை உத்திகளை இயக்குனர் கையாண்டுள்ளார்.

பல விமர்சனங்கள், படத்தின் திரைக்கதையை வன்மையாய் தாக்கியிருந்தன. மேல் நாட்டு இயக்குனர்கள் எடுத்த 'அவதார்','நார்னியா' போன்ற படங்களைப் பாராட்டிய அதே சில இணையதளங்களும், விமர்சகர்களும் தான் இந்த படத்தினைத் தாக்கியிருந்தனர். ஒரு வேளை செல்வராகவன் இந்த படத்தினை ஆங்கிலத்தில் எடுத்திருந்தால் இப்படத்தினை அந்நாட்டு மக்கள் மிகையாய் வரவேற்றிருப்பார். என்ன செய்வது, அவர் தமிழ் நாட்டில் பிறந்துவிட்டதால் இங்கே படத்தினை எடுக்க வேண்டியுள்ளது. ஒருவேளை இந்த படத்தினை ஜேம்ஸ் காமேரூன், ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் போன்ற மேலை நாட்டு இயக்குனர்கள் எடுத்திருந்தால், தூற்றியவர்கள், போற்றியிருப்பர்களோ?

ஒரு தமிழன், தன் படத்தின் மூலமாக மேலை நாட்டுப் படங்களுக்கு சவால் விடுகிறான். அதனை, நம்மவர்கள் என்றுதான் ஏற்றார்கள். சிங்கங்களும், மற்ற விலங்குகளும் மேலை நாட்டு படங்களில் பேசுவதை ஏற்கும் நாம், இது போன்ற தமிழனின் படைப்பினை ஏற்க மறுக்கின்றோம். இந்த படத்தினை பொறுத்த வரையில், புதியதொரு உலகினையும், காதலைப் புதியதொரு கோணத்திலும் திரையரங்கில் கண்டு களிக்கலாம்.   


என் மதிப்பு  - 7.25 / 10 [அட்டகாசமான பின்னணி இசையும், வேகமான திரைக்கதையும் அமைத்திருந்தால் இன்னும் நிறையவே மதிப்புகள் கொடுத்திருக்கலாம்]



1 comment:

  1. உன்னுடைய தமிழில் எழுதும் முயற்சியை வரவேற்கிறேன்.

    ReplyDelete