Friday 9 August 2013

Cinema மினிமா's Movie Review on 'Thalaivaa'


ஒரு சினிமா விஷயத்தில் கூட ஒற்றுமை இல்லை. தமிழ் படம் வெளியிட தமிழகத்திலேயே தடை. தமிழனுக்கு தமிழனே எதிரியாக இருக்கும் போது, இலங்கைக்காரன் மட்டும் இல்ல, இன்னும் மத்த நாட்டுக்காரனும் நம்மல அடிப்பான். திரையரங்குகளில் உங்கள் சாதனைகளை விளம்பரப்படுத்திக் கொள்ளும் தமிழக அரசே, இப்படி விஸ்வரூபம், தலைவா போன்ற தமிழ்ப் படங்களை தடை செய்ததையும் அந்த சாதனைகளோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இந்த படத்தின் விமர்சனத்திற்காக பாலக்காடு வரை சென்று பார்த்து வந்தேன் என்பதை பெருமையோடு சொல்ல விரும்பவில்லை. வெட்கத்துடனே சொல்கிறேன். இந்த தமிழனுக்கு ஆதரவளிக்க இந்த விமர்சனத்தை தமிழிலேயே உங்களுக்குப் படைக்கிறேன்.

நடிப்பு: 'இளையதளபதி' விஜய், சத்தியராஜ், அமலா பால், சந்தானம்
இசை: ஜி.வீ .பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: நிரவ் ஷா
எழுத்து, இயக்கம்: விஜய்

'இளைய தளபதி' விஜய்யும், இயக்குனர் விஜய்யும் முதன் முறையாக கூட்டணி சேர்ந்த நாள் முதலே 'தலைவா' படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பர்ர்ப்பு பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா  என்று இந்த விமர்சனத்தில் காணலாம்...

நடிப்பு:

படத்தின் நாயகன் 'இளைய தளபதி' விஜய். இந்த படத்தில் மிகவும் இளமைத் துள்ளலுடன் காட்சி அளிக்கிறார். நடனம்,சண்டை காட்சிகள், வசனங்கள் என தனக்குரிய முத்திரையை பதித்திருக்கிறார். படத்தின் நாயகியாக அமலா பால். முதன்முறையாக அவர் தன் சொந்த குரலில் பேசி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். படத்தில் 4 பாடல்களுக்காக வந்தோம் சென்றோம் என்பது போல் இல்லாமல், படத்தில் தனக்கென்று ஒரு இடத்தை தன் துல்லியமான நடிப்பினால் பிடித்திருக்கிறார்.

விஜய்யின் தந்தையாக சத்தியராஜ். அவரை படத்தின் இன்னொரு நாயகன் என்று கூட சொல்லலாம். அப்படி ஒரு நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார் மனிதன். சந்தானம் வழக்கம் போல் தன்னுடைய நகைச்சுவை உணர்வால் ரசிகர்களுக்கு சிரிப்பு விருந்து வழங்குகிறார். இவர்களுடன் மகேந்திரன், அபிமன்யு சிங், நாசர், மனோபாலா என ஒரு பெரிய திரைப்பட்டளமே தங்கள் நடிப்பினை செவ்வனே செய்துள்ளனர்.

இசை மற்றும் ஒளிப்பதிவு: 

விஜய்க்கு அடுத்ததாக படத்தின் மிகப்பெரிய பலம் இசையும் ஒளிப்பதிவும் என்று கூட சொல்லலாம். ஜி.வீ .பிரகாஷ் குமார் மிக அற்புதமாக இசையமைத்திருக்கிறார். அவரது பாடல்களுக்கு ஏற்றார் போல் நிரவ் ஷாவின் ஒளிப்பதிவும் மிக பிரம்மாண்டமாய் அமைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் அழகை தன்னுடைய காமெராவும் மூலமாக நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். 'யார் இந்த சாலை ஓரம்' பாடல், காட்சி அமைப்புகளில் மிளிர்கிறது.

திரைக்கதை, வசனம், மற்றும் இயக்கம்:

படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. அதனால் திரைக்கதையை நம்பியே இயக்குனர் விஜய் களமிறங்கி இருக்கிறார். முதற்பாதியில் வேகமாகச் செல்லும் திரைக்கதை, பிற்பாதியில் வேகம் குறைந்து விடுகிறது. முதல் பாதியில் ஆஸ்திரேலியா, காதல்,சந்தானத்தின் காமெடி என படம் மிக அற்புதமாக நகர்கிறது. இரண்டாவது பாதியில் மும்பையில் நடக்கும் காட்சிகளில் இயக்குனர் விஜய் குழம்பிவிட்டார் என்று நினைக்கிறேன். அதுவே படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைகிறது.

படத்தில் அரசியல் வசனங்கள் இருப்பதாக கூறப்பட்டது. அனால் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. [அப்படியே அரசியல் வசனங்கள் இருப்பது போலத் தெரிந்தாலும்,  அது ஒரு கலைஞனின் சுதந்திரம் தானே. இதற்காகவா ஒரு படத்தை தடை செய்வது?] மேலும், இந்த படத்தின் நீளமும் படத்தின் இன்னொரு பலவீனம். படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்கும் மேலாக இருக்கிறது. பிற்பகுதியில் மெதுவாக செல்லும் திரைக்கதையும், படத்தின் நீளமும் ரசிகர்களுக்கு சட்ட்று சலிப்பை உண்டாக்குகிறது. இவை இரண்டினையும் கண்டிப்பாக இயக்குனர் கவனித்திருக்க வேண்டும்

கண்டிப்பாக இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய விருந்து. அனால், எல்லோருக்கும் அப்படி இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். திரைக்கதை நேர்த்தியாக அமைந்திருந்தால், இந்த தலைவனுக்கு கண்டிப்பாக சலாம் போட்டிருக்கலாம்..

என் மதிப்பு- 6/10 [விஜய் பிரியர்களுக்கு மட்டும்]

1 comment:

  1. விஸ்வரூபம் வேறு பிரச்சனை இது வேறு பிரச்சனை. வரிவிலக்கு அளிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு, முன்பதிவுகள் நிறைவடைந்த பின் வரிவிலக்கு கிடைக்கவில்லை என்பதால் படத்தை வெளியிட மாட்டோம் என்று கூறுவது அயோக்கியத்தனம். எத்தனை படங்கள் வரிவிலக்கோடு வந்திருக்கிறது ? வரிவிலக்கு இல்லாமல் ஜெயித்த படங்கள் எத்தனை என்பதை யோசித்து பார்க்க வேண்டும். தவறான கருத்துக்களை கூறாதீர் ஒரு விமர்சகராக, என் நண்பன் என்ற முறையில் வெளிப்படையாக தெரிவித்து விட்டேன். தவறாக நினைத்தால் மன்னிக்கவும். நன்றி !!

    ReplyDelete