நடிப்பு: கரன், சரிதா, கருணாஸ், சுகந்தா
இசை: விஷால்
ஒளிப்பதிவு-இயக்கம்: சந்தோஷ் சிவன்
இனி தமிழ் படங்களின் விமர்சனத்தை எழுதக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். நேற்று 'இனம்' திரைப்படத்தைப் பார்த்த பின்னர், இந்த தரமான படைப்பிற்கு விமர்சனம் எழுதியே தீர வேண்டும் என்று முடிவு செய்து இந்த விமர்சனத்தை ஆரம்பிக்கிறேன்.
4 தேசிய விருதுகள் வாங்கிய ஒளிப்பதிவாளரும், பலரும் பாராட்டும் படங்களை எடுத்த இயக்குனரும் உள்ளடங்கிய மனிதர் சந்தோஷ் சிவன். அவரது கதை-திரைக்கதை-இயக்கம்-ஒளிப்பதிவிலும், சமீப காலமாக மிகத் தரமான திரைப்படங்களைத் தயாரித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் இயக்குனர் லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பிலும், இலங்கையில் நம் தமிழ் இனத்தின் வாழ்க்கையையும் இன்னல்களையும் அவர் படைத்திருப்பதே 'இனம்'. நம் தமிழ் இனத்திற்காக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் விமர்சனத்தினைத் தமிழிலேயே உங்களுக்கு வழங்குகிறேன்!!
நடிப்பு:
படத்தில் வரும் கதாபாத்திரங்களில் சரிதா, கருணாஸ் தவிர அனைவரும் புதியவர்களே. சுனாமி அக்காவாக சரிதா. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிக்க வந்திருக்கும் இவர், நடிப்பில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஸ்டான்லியாக கருணாஸ் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் வருகிறார். வசன உச்சரிப்பு, முக பாவனைகள் என அனைத்திலும் பின்னி எடுத்திருக்கிறார் மனிதர்.
படத்தினை தன் அட்டகாச நடிப்பினால் தாங்கி பிடித்திருக்கும் இன்னொரு ஜீவன், கரன் [அறிமுகம்]. மனநலம் குன்றியவராக வரும் அவர் பல இடங்களில் கவனிக்க வைக்கிறார். மேலும், சுகந்தா, ஷ்யாம் சுந்தர், சௌம்யா, விக்ரம் என அனைத்து அறிமுகங்களும் தங்கள் பணியை செவ்வனே செய்கின்றனர். இவர்களை தவிர அந்த கதாபாத்திரத்தில் வேறு எவரும் நடித்திர இயலாது என்பது போல நடித்து அசத்தியுள்ளது இந்த படை.
இசை மற்றும் ஒளிப்பதிவு:
படத்தின் இசையினை அறிமுக இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கையாண்டுள்ளார். அவரது இசையில் பாடல்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. அனால் பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார். முதல் படத்திலேயே போர் காட்சிகளுக்கு பின்னணி தருவது என்பது மிக எளிதான விஷயம் இல்லை. இனி வரும் படங்களில் இவர் கவனிக்கப் படுவார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு. அனைத்து காட்சிகளும் மிக நேர்த்தியாய் அமைந்திருக்கின்றன. போர் காட்சிகளில் காமிரா நம்மை போர்க்களத்தின் உள்ளேயே அழைத்துச் செல்கிறது. நாமே போர்க்களத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை நமக்கு தருவதே இந்த படத்தின் வெற்றி. இந்த காட்சிகளை திரையரங்கினில் கண்டு களித்தால் மட்டுமே அந்த உணர்வைப் பெற முடியும்.
வசனம், திரைக்கதை, இயக்கம்:
படத்தில் வசனங்கள் யாவும் மிக நேர்த்தியாய் அமைந்திருக்கின்றன. இவற்றுள் என்னை மிகையாய் கவர்ந்தவை - தமிழர்களின் பெருமையைக் கூறி சரிதா மனம் உடைந்து அழும் காட்சி, 'கண் திறந்திருந்தா திரும்ப வருவாங்கன்னு சுனாமி அக்கா சொல்லிருக்காங்க! லீடர் திரும்ப வருவார்' என நந்தன் உருகும் காட்சி. ரசிகர்களும் இந்த காட்சிகளில் பலத்த கரகோஷங்களை எழுப்பினர்.
சந்தோஷ் சிவனின் திறமை ஒளிப்பதிவோடு நின்றுவிடாமல் திரைக்கதையிலும் மிளிர்கிறது. இலங்கைப் பிரச்சனையைப் பற்றிய கதை என்றாலும் விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத்தின் இடையே நடக்கும் போரினைப் பற்றி மட்டும் கூறுவது போல் இல்லாமல், அங்கே வசிக்கும் ஈழ மக்களின் வாழ்க்கையில் தொடங்கி, அந்த போரினால் அவர்கள் படும் நரக வேதனையை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது சந்தோஷ் சிவனின் திரைக்கதை. போர் காட்சிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் காட்சிகள் என அனைத்தும் மிக இயற்கையாய் அமைந்து நம் மனதை வெகுவாய் பாதிக்கின்றன. ரஜினியைக் காப்பாற்ற நந்தன் ராணுவ வீரனைக் கத்தியால் குத்தும் காட்சி, காட்சியமைப்பின் உச்சகட்டம்.
அவரது திறமை அதோடு நின்று விடாமல், இலங்கை இராணுவம் பற்றிய காட்சியமைப்பிலும் மிளிர்கிறது. ஒரு புறம் இலங்கை ராணுவ வீரர்கள் ஈழ தமிழர்களை கொண்டு குவிப்பது, பெண்களை பலாத்காரம் செய்து கொல்வது போன்று காட்டியிருந்தாலும், அவர்களிலும் ஒரு நல் உள்ளம் கொண்ட வீரனைக் காட்டி, இலங்கை ராணுவத்திலும் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்பது போல் காட்டியிருக்கிறார்.
ஆங்கில பட இயக்குனர்கள் மட்டுமே எடுக்கும் போர் சம்பந்தமான படங்களுக்கெல்லாம் சந்தோஷ் சிவன் இந்த படத்தின் மூலமாக சவால் விட்டிருக்கிறார். 'Pear Harbour', 'Schindler List' போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் உலகத் தரம் வாய்ந்த படம் என்று கூறினால் அது மிகையாகாது. ஒருவரை மட்டுமே குறை கூறவேண்டும் என்று எடுக்காமல், ஈழ மக்களின் வாழ்க்கையைப் படமாக காட்டியிருப்பதே இந்த படத்தின் சிறப்பு. நம்முடைய ரசிகர்கள் இது போன்ற படைத்திருக்கு எப்படி வரவேற்ப்பு அளிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
படம் முழுவதும் ரசிகர்களை எங்கும் நகர விடாமல், ஆங்காங்கே சிறு கைத்தல்களைப் பெற்று, ஆங்காங்கே ரசிகர்களை கண்ணீர் விடச் செய்து, படத்தின் இறுதியில் ரசிகர்களின் பலத்த கைத்தட்டலைப் பெற்று, அனைவரையும் கனமான இதயத்தோடு வெளியேற்றுகிறது. இந்த அற்புதமான படைப்பினை அனைவரும் திரையரங்கினில் கண்டு களிக்க வேண்டும் என்பது என்னுடைய பணிவான வேண்டுகோள். தமிழீழம் வாழ்க! வளர்க!
என் மதிப்பு - 8/10 [கண்டிப்பாக அனைவரும் கண்டுகளிக்க வேண்டிய காவியம்]
குறிப்பு: திரைப்படத்தில் 4 பாடல்கள், 5 சண்டைக் காட்சிகள் என பொழுதுபோக்கு சினிமா ரசிகர்களுக்கு, இந்த படம் பிடிக்காமல் கூட இருக்கலாம். அப்படி நினைப்பவர்கள் உண்மை தமிழர்களே இல்லை!
No comments:
Post a Comment