Experiences

தமிழ்நாடு எங்கே செல்கிறது???

ஐந்து ஆண்டுகளுக்கு  ஒருமுறை தமிழகத்துக்கு தேர்தல் ஒன்று மறவாமல் வந்து விடும். மக்களும் மறக்காமல் ஒவ்வொரு முறையும் ஐயாவையும், அம்மாவையும் மாற்றி மாற்றி ஆட்சியில் அமர்த்துவர். ஒவ்வொரு முறையும் ஏதோ காரணத்தினால் ஆட்சி மாற்றம் நடக்கிறது. ஆனால், புதியவர் எவருமே வருவதில்லை. மக்களும் விரும்புவதில்லை. இதில் நடந்த மற்றும் நடக்கும் ஒரு சில நிகழ்வுகளை இந்தக் கட்டுரையில் காண்போமே...

முன்னர்:
2006 ஆம் ஆண்டு ஐயா அவர்கள், தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார். அப்போது அந்த தேர்தலின் போது அவர் வாக்குறுதி அளித்த திட்டங்களுள் ஒன்றான ரூ.2 க்கு ரேஷன் அரிசி திட்டத்தை தனது முதல் கடமையாக கையெழுத்திட்டார். அந்த நொடி முதல் தமிழகத்தில் பல திட்டங்கள் அமல் படுத்தப்பட்டன. அவற்றுள், கலைஞர் காப்பீடு திட்டம், கலைஞர் வீட்டுமனை திட்டம் என பலவும் அடங்கும்.


அமல் படுத்தப்பட்ட அத்தனை திட்டங்களும் அரசு திட்டங்களே. ஐயாவின் சொந்த செலவில் அமல்படுத்தப்பட்டது போல 'கலைஞர் திட்டம்' என்று அனைத்திலும் இருந்தன. 'தமிழக அரசு திட்டம்' என்று எதிலும் இல்லை. பின்னர் அந்த அரசு, மின்வெட்டு, 2ஜி ஊழல் என  பல சர்ச்சைகளில் சிக்க நேர்ந்தது. இதனால் 2011 ஆம் ஆண்டு தேர்தலின் போது படுதோல்வி அடைய நேரிட்டது.

பின்னர்:
அப்போது ஆட்சியை பிடித்த அம்மையார், மின் வெட்டு மற்றும் இதர பிரச்சனைகளில் இருந்து தமிழகத்தை மீட்பதாக உறுதி அளித்தார். ஆனால் பிரச்சனை பெரிதாகவே செய்தது. பேருந்து கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு என மின் வெட்டு நேரமும் கடைசியாக உயர ஆரம்பித்தது. இவை எல்லாவற்றுக்கும் காரணம் முந்தைய அரசு தான் என்று சப்பை கட்டு கட்டி விட்டு, சில காலத்துக்கு பின்னர், மின் வெட்டு நேரம் குறைக்கப்பட்டது. தற்போது மின்வெட்டு அவ்வப்போது மட்டும் இருக்கிறது. 

 இந்த மின்வெட்டு, அரசியல் நாடகமாக இருக்குமோ என்ற கேள்வி சிலருக்கு உதிக்க ஆரம்பிக்க நேர்ந்த நேரத்தில், தற்போதைய அரசு பல திட்டங்களை செயல் படுத்த தொடங்கியது. அம்மா மடிக் கணினி, அம்மா உணவகம், அம்மா தண்ணீர் பாட்டில்கள் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.  இந்த திட்டங்களைப் பற்றிய தொகுப்பு அனைத்தும், மக்கள் மறவாதிருக்க பல திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.



 தற்போது, அம்மையாரும் முன்னர் ஐயா செய்தது போலவே தன சொந்த செலவில் செய்வது போன்று 'அம்மா
திட்டம்' என்று அனைத்து திட்டங்களிலும் பெயர் வைக்க ஆரம்பித்துள்ளார். இவற்றை எதிர்த்து பேசுபவர் பலர் மேல் வழக்குகளும் போடப்பட்டன. இப்படி பல இருக்கும் போது, சிலர் அம்மையார் தான் அடுத்த பிரதமர் என்னும் பிரச்சாரங்களைச் செய்கின்றனர். அதற்க்குக் காலம் தான் பதில் சொல்லும்.

மேலும் சில கட்சியினர் அடுத்த தேர்தலில் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என்று பிரச்சாரங்களைச் செய்கின்றனர்  ஆனால் இவர்களும் பணத்திற்காக ஆசைப்பட்டு கூட்டணி மாறுவது, சாதி கலவரத்தை தூண்டுவது, தேவையில்லாத அறிக்கைகளை விடுவது போன்ற காரணங்களால் நிலையில்லாமல் போய் விட்டனர். இதனால் மக்கள், புதிதாக தேர்தலில் வருபவரை நம்பாமல் மீண்டும் கரை வெட்டியோ அல்லது கரை சேலையோ போதும் என்று விட்டுவிடுகின்றனர். ஆனால் மக்கள் தாங்கள் விட்டது தங்கள் உரிமை என்பதை  உணருவதில்லை. 

மறதி என்பது நம்மோடு பிறந்த ஒன்றாக அமைந்து விட்டது. தவறு செய்கிறார் என்பதால், அவரைத் தேர்தலில் தோல்வியடையச் செய்யும் நாம், அடுத்த தேர்தலிலேயே அவரை வெற்றி பெறவும் செய்கிறோம். எதற்காக?? சிலர் ஓட்டுக்கு காசு வாங்கி விட்டு இப்படி செய்கின்றனர். மற்றும் சிலர் ஒட்டு போடுவதையே விட்டு விடுகின்றனர். புதியவர் வந்தாலும் அவரை ஒன்று தழைத்திருக்கும் அரசியல் கட்சிகள் வர விடுவதில்லை. அதைக் கடந்து வந்தாலும் மக்கள் அவர்களை நம்புவதில்லை. 

தழைத்திருக்கும் கட்சிகளே மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றன. அவர்கள், அவர்குளுக்குப் பின் அவர்கள் ரத்த பந்தம், என குடும்ப அரசியலே இங்கு நடக்கிறது. இதை வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக மக்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட தமிழகம் வருங்காலத்தில் எங்கே செல்லப் போகிறது?? மக்கள் விழித்தெழுவார்களா??

1 comment:

  1. unmai... kadantha therthalil en vakkai, nan evarukkum ottalikka virumbavillai endre pathivu seithen...

    - SJ

    ReplyDelete