வாரம்தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் புதிய படங்கள் வெளியாகின்றன. அவற்றுள் சில படங்களே மக்கள் மனதில் இடம் பிடித்து தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றுள் ஒன்று இந்த 'இறுதிச்சுற்று'. மாதவன், ரித்திகா சிங், நாசர், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் கடந்த 29ம் தேதி வெளியானது.
4 வருடங்களுக்குப் பிறகு மாதவன் மீண்டும் திரையில் வந்திருக்கிறார். பெரும்பாலும் சாதுவான தோற்றத்தில் நடிப்பவர், இப்படத்திற்காக தனது தோற்றத்தை நன்கு மெறுகேற்றியிருக்கிறார். ஒரு குத்துச் சண்டைப் பயிற்சியாளராகவே வாழ்ந்திருக்கிறார் என்றே கூறலாம். ஒரு நேர்மையான பயிற்சியாளனின் வீரம், கோபம், வலி, ஏக்கம் ஆகியனவற்றைத் தனது அசாத்திய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தன் மேலதிகாரியின் அரசியலால் அவதிப்படும் காட்சிகளில் ரசிகர்களைப் பரிதாபப்பட வைக்கிறார். தம்பி படத்திற்குப்பின் ஒரு வித்தியாச முயற்சி. இந்த கதாபாத்திரத்தில் வேறு எவரையும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு மனிதர் வெளுத்து வாங்கிவிட்டார். இப்படி ஒரு அற்புதமான கதாபாத்திரதிற்காகவே இவ்வளவு பெரிய இடைவெளி என்பது ஏற்கத்தகுந்தது.
படத்தின் நாயகி ரித்திகா சிங். திரையுகிற்கு கிடைத்திருக்கும் ஒரு புதிய வரப்பிரசாதம். நடிப்பில் மாதவனையே மிஞ்சி விட்டார். இயல்பிலேயே இவர் குத்துச் சண்டை வீராங்கனை என்பதால், குத்துச் சண்டைக் காட்சிகளில் மிக இயல்பாக பொறுந்தியிருக்கிறார். அழகும் குறும்பும் வீரமும் பொருந்திய தனது கதாபாத்திரத்தில் - தவறான தீர்ப்பு வழங்கும் நடுவர்களைப் போட்டு புரட்டி எடுப்பது, தனுஷின் ரசிகையாக அவரைப் போலவே நடனமாடுவது, மாதவனைப் பார்த்து கோபப்படுவது, அவரைப் பார்த்து நக்கலாக சிரிப்பது, ஒற்றைக் கையில் உடற்பயிற்சி, வெற்றிக்களிப்பில் அழுவது என பின்னியெடுத்திருக்கிறார். பெண்களால் இப்படி ஒரு கதாப்பாத்திரத்திலும் நடிக்க முடியும், இப்படி ஒரு வீராங்கனையாக சாதிக்க முடியும் என்பதற்கு இது சான்று.
மற்ற கதாபாத்திரங்களும் தத்தம் கடமைகளைச் செவ்வணே செய்கின்றனர். சிவகுமார் விஜயனின் கேமராவும், சந்தோஷ் நாராயணின் இசையும் படத்தின் பலத்தை அதிகரிக்கின்றன. படத்தின் இறுதிச்சுற்றைக் கனக்கச்சிதமாகக் காட்சிப் படுத்தியதில் இக்கூட்டணியின் பங்கு பெரிது என்றே கூறலாம்.
இப்படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா. படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் தேர்வு செய்த விதத்தில் மிகையாய் மிளிர்கிறார். ரித்திகாவை முதலில் ஒரு பேன்ட்-சட்டை அணிந்து கொண்டு அவர் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் ஓடும் பெண்ணாகவும், பின்னர் மாதவன் மீது கோபத்துடன் ஓடும் பெண்ணாகவும், இறுதிக் காட்சியில் மாதவனைப் பார்க்க ஏக்கத்துடன் ஓடும் பெண்ணாகவும் வித விதமாகவே பதிவு செய்திருப்பது நேர்த்தி. இப்படம் இந்தியிலும், தமிழிலும் எடுக்கப்படுகிறது என்பதால், ரித்திகாவின் குடும்பத்தினரை இந்தி - தமிழ் கலந்த குடும்பமாக காட்சிப் படுத்தியதில் இவரது புத்திசாலித்தனம் மிளிர்கிறது. ஒரு பெண்ணின் வளர்ச்சியைப் பற்றிய படமாக இருந்தாலும், பெண்களை நல்லவர்களாக மட்டுமே பதிவு செய்யாமல், பெண்களின் வீரத்தையும் காதலையும் ரித்திகா மூலமாகவும், சில பெண்களின் பொறாமை குணத்தை ரித்திகாவின் சகோதரி மூலமாகவும், சில பெண்களின் வஞ்சக குணத்தை ரித்திகாவை வில்லனிடம் அழைத்துச் செல்லும் பெண் மூலமாக பதிவு செய்தது பாராட்டுக்குரியது.
பெண்களுக்கான குத்துச் சண்டைக் கதையில், காட்சிப்படுத்தும் விதம் சிறிது பிசகினாலும் மொத்த கதையும் முடிந்துவிடும். அதனை மிக நேர்த்தியாக கையாண்டுள்ளார் என்றே கூறலாம். மாதவன் - ரித்திகா இடையேயான குரு-சிஷ்யை உறவை ஒரு கவிதையைப் போல் கூறியதற்கும், ஒரு பெண் குனியும்போதும் குதிக்கும்போதும் அவள் அழகைக் காட்டாமல், அவளது வீரத்தையும், தைரியத்தையும் சிறப்பாக காட்டியதற்கும், ஒரு பூங்கொத்து என்ன, ஒரு பூக்கடையையே கொடுத்தாலும் மிகாது. சிம்புவின் பாடலுக்கு வழக்கு பதிவு செய்த மாதர் சங்கமே, இது நீங்கள் விருது கொடுத்து கொண்டாட வேண்டிய படம். என்ன செய்கிறீர்கள் என்று பார்க்கலாம்.